Tuesday, August 24, 2010

இது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்


இது எனது நகரம் இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட
மாதிரியிலான நகரம் இல்லை இது.
குள்ளநரித் தனமான அரசியல்வதிகளுடையது இந்த நகரம்
பழி பாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகளின்
சதை வியாபாரிகளின் கூட்டிக் கொடுப்பவர்களின்
பொறுக்கிகளின்,வன்புனர்வாளர்களின் நகரமேயல்லாது
இது எனது நகரமாக இருக்க முடியாது

வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும் ஊமை
சாட்சிகளாயிருப்பவர்களுக்கனது இந்நகரம்
எனக்கானது இல்லை

அயோகியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்
அனாதரவனவர்கள் குறித்த உணர்ச்சியற்று
பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்.

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்
பிச்சைகாரர்கள் மடிகிறார்கள்.
தப்பித்தல்வாதிகளுடைய இந்த நகரம்
குறைந்தபட்ச இன்னல் என்றாலும்
அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது.
அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்
பேய்களின் நகரம் இது.

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி
வீராவேசமாக இங்கு வாயடித்துக்கொண்டிருப்பார்கள்
முகத்துதிக்காரர்களின் நகரம் இது
தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்
சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது
இதனை ஒரு போதும்
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்
இனி ஒரு போதும்

பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
மதவெறி அயோக்கியர்கள்
இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய
ஆண்களும் பெண்களும்தான்
இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன்,
சுதந்திர சிந்தனைகளுடன்,
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு
இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது எனது நகரம் இல்லை தொகுப்பு

தஸ்லிமா நஸ்ரின் -இது எனது நகரம் இல்லை தொகுப்பு
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்

1 comment: